
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தை தந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் இன்று (ஜூலை 18) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். ஸாக் கிராலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்தார் ஆலி போப். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. வெறும் 4.2 ஓவர்களில் இந்த இணை 50 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சாதனை படைக்க காரணமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் குவித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 59 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஆலி போப் 47 ரன்களுடனும், ஜோ ரூட் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.