
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவும், ஒருநாள் தொடரில் அணியை ரோஹித் சர்மாவும் வழிநடத்துகின்றனர். அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஹார்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யகுமார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஹார்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஓராண்டாகவே ஹார்திக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு பாண்டியா ஆளானார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதன்பின், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னைகளை சந்தித்து வந்த பாண்டியா அண்மையில் அவரது மனைவியை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சக வீரரான சூர்யகுமார் யாதவ், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹார்திக் பாண்டியா தொடர்ந்து கேப்டனாக வழிநடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால், மும்பை இந்தியன்ஸ் எந்த வீரர்களை அணியில் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்பதும் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். இவர்களுடன் இந்த ஆண்டு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹார்திக் பாண்டியாவும் இருக்கிறார்.
ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விவரங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என மொத்தம் 4 பேரை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் கூறினால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எந்த வீரர்களை தக்க வைக்கும்.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா இவர்களில் மூவரை மட்டும் தக்க வைக்கும் சூழல் உருவானால் மும்பை அணியின் முடிவு என்னவாக இருக்கும். ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்குமா? ஹார்திக் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவாரா? அல்லது அணி நிர்வாகம் மாற்று வழியை யோசிக்குமா?
ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி பயணத்தின் நடுவே இத்தனை சவால்கள் இருக்கின்றன. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பது கவனிக்கப்படும். தனக்கு முன்பாக இருக்கும் தடைக்கற்களை சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவாரா என்பதையும், இந்திய அணியின் கேப்டனாக மாறுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.