
ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (நவம்பர் 5) அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி சார்பில் ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களான நோமன் அலி மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்பும் ஆஸி. வீரர்!
நோமன் அலி (பாகிஸ்தான்)
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்களான நோமன் அலி மற்றும் சாஜித் கான் முக்கிய பங்கு வகித்தனர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நோமன் அலி இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முறையே 11 விக்கெட்டுகள் மற்றும் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பாகிஸ்தானுக்கு தனது பங்களிப்பை வழங்கினார் நோமன் அலி. மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, நோமன் அலி சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். இதன் மூலம், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்றது.
ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)
தென்னாப்பிரிக்க அணி அண்மையில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதில் இரண்டு ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரபாடா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் முறையே 6 விக்கெட்டுகள் மற்றும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வரலாற்று இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. ரபாடா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்தின் இந்த வெற்றிக்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் மிட்செல் சாண்ட்னர்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட மிட்செல் சாண்ட்னர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் இரண்டு ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
நோமன் அலி, ககிசோ ரபாடா மற்றும் மிட்செல் சாண்ட்னர் மூவருமே அவர்களது அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். இவர்களில் யார் ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.