
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க எந்த அணி முனைப்பு காட்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது கிரிக்கெட் பயணத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது இந்த சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இங்கிலாந்து அணிக்காக மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக அவர் செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஏலம் போவாரா ஆண்டர்சன்?
ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை ஆண்டர்சன் பதிவு செய்துள்ளது சிறப்பானது என அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த அணியாவது ஜேம்ஸ் ஆண்டர்சனை ஏலத்தில் எடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட் குறித்து தொடர்ந்து ஆண்டர்சன் அவரது அனுபவங்களை வளர்த்துக்கொள்ள நினைக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாவிட்டால், கிரிக்கெட் தொடர்பான அடுத்த பயணத்தை தொடர்வார். ஆனால், அவர் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால், அது என்ன மாதிரியான அனுபவத்தை அவருக்கு கொடுக்கும். அது அவருக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும். அவருக்கு அதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.
சர்வதேச போட்டிகளில் ஆண்டர்சன் அதிக அளவில் விளையாடியுள்ளார். ஆனால், டி20 லீக் போட்டிகளில் அவர் ஒருபோதும் விளையாடியது கிடையாது. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் அல்லது அப்படி இல்லையென்றாலும், மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டுவார் என்றார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.