
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
பிராதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடின. அந்தப் போட்டிகளில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் ஜுரெல் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் 80 மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்தார்.
துருவ் ஜுரெல் வேண்டும்
பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெலை அணியில் சேர்க்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிம் பெய்ன் பேசியதாவது: இந்திய அணிக்காக இதுவரை குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஒருவர் இருக்கிறார். அவர் விளையாடியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில், அவரது சராசரி 63 ஆக உள்ளது. அவருடைய பெயர் துருவ் ஜுரெல்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்காக அவர் விளையாடியதை பார்த்தேன். பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படவில்லையென்றால், மிகவும் ஆச்சரியப்படுவேன். 23 வயதாகும் அவர் விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, துருவ் ஜுரெல் இந்திய அணியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.