
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட முடியாத பட்சத்தில் இந்திய அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பு
பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது தொடர்பான சரியான தகவலை உங்களுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம். அவர் முதல் போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற தகவலை தொடர் தொடங்குவதற்கு முன்பாக தெரிவித்துவிடுவோம்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்
பெர்த்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறாத பட்சத்தில், துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அந்த போட்டியில் அணியைக் கேப்டனாக வழிநடத்துவார். ரோஹித் விளையாடாத பட்சத்தில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே.எல்.ராகுல் தயாராக இருக்கிறார்கள். முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, அணிக்கு வெற்றி பெற்றுத் தரக்கூடிய சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம்.
கே.எல்.ராகுல் டாப் ஆர்டரில் விளையாடக் கூடியவர். அதேபோல, அவர் 3-வது மற்றும் 6-வது இடத்தில் களமிறங்கியும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். இதுபோன்று வெவ்வேறு இடங்களில் களமிறங்கி சிறப்பாக விளையாடும் வீரர்கள் எத்தனை அணிகளில் இருக்கிறார்கள். முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.
இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தரக் கூடிய வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக தேர்ந்தெடுத்திருக்கிறோம். நிதீஷ் ரெட்டி மிகவும் திறமையான வீரர். அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், இந்திய அணிக்காக போட்டிகளை வென்றுக் கொடுப்பார் எனத் தோன்றியது.
இந்திய அணியில் தரமான பந்துவீச்சு வரிசை உள்ளது. பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற உயரமான பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. இந்திய அணியில் உள்ள 5 வேகப் பந்துவீச்சாளர்களும் வெவ்வேறு விதமான திறமைகளை தங்களுக்குள் வைத்துள்ளனர். அவர்களது அந்த திறன் எங்களது வேகப் பந்துவீச்சு வரிசைக்கு மிக மிக முக்கியம்.
தொடருக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட 10 நாள்கள் இருக்கின்றன. இந்த 10 நாள்களும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான நாள்கள். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நிறைய அனுபவமிக்க வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களது அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும். தொடருக்கு முன்பாக உள்ள 10 நாள்களும் மிகவும் முக்கியம். நவம்பர் 22 ஆம் தேதி காலை இந்திய அணி முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.