
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கான தேடல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
முடிவுக்கு வந்த தேடல்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின்போது, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி நீண்ட நாள்களாக தொடர்ந்தது. டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கான சரியான வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறங்கியது.
இந்த நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்ததுடன், தொடக்க ஆட்டக்காரர் யார் என்பதையும் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, உஸ்மான் கவாஜாவுடன், நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஷ் இடம் பிடித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான நாதன் மெக்ஸ்வீனிக்கு முன்னாள் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவதற்கான போட்டியில் இருந்த நிலையில், அன்கேப்டு வீரரான நாதன் மெக்ஸ்வீனி அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அணித் தேர்வுக்குழுத் தலைவர் சொல்வதென்ன?
நாதன் மெக்ஸ்வீனியின் ஆட்டம் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாதன் மெக்ஸ்வீனியின் ஆட்டம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. கடந்த 12-15 மாதங்களாக அவரது ஆட்டத்தை நாங்கள் கவனித்து வந்தோம். அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். ஆட்டத்தை மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் அணுகுகிறார். அவரது ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது என்றார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸி. அணி விவரம்
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.