இந்திய வீரர்களிலேயே ரிஷப் பந்த் மிகவும் வேடிக்கையானவர் என ஆஸ்திரேலிய அணியின் மார்னஷ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், இந்திய அணி தொடர்ச்சியாக தொடர்களை வென்று அசத்தியது. கடந்த முறை இந்திய அணி தொடரை வெல்ல ரிஷப் பந்த் மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
மிகவும் வேடிக்கையானவர்
இந்திய வீரர்களிலேயே ரிஷப் பந்த் மிகவும் வேடிக்கையானவர் என ஆஸ்திரேலிய அணியின் மார்னஷ் லபுஷேன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் மிகவும் வேடிக்கையான நபராக நான் பார்ப்பது ரிஷப் பந்த்தையே. அவர் எப்போதும் வேடிக்கையாக நடந்துகொள்வார். அவரிடத்தில் பெரிய சிரிப்பை எப்போதும் பார்க்கலாம். ஆட்டத்தின் தேவையை உணர்ந்து விளையாடக் கூடிய மிகச் சிறந்த வீரர் என்றார்.
இந்திய அணியில் மிகவும் எரிச்சலூட்டக் கூடிய வீரராக ரவீந்திர ஜடேஜாவை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் கூறியுள்ளனர்.
இது குறித்து ஸ்டீவ் ஸ்மித், ஆடுகளத்தில் ரவீந்திர ஜடேஜாவால் எரிச்சலூட்டப்படுவேன். ஏனென்றால், அவர் மிகச் சிறந்த வீரர். ரன்கள் எடுப்பதாக இருக்கட்டும், விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் ஃபீல்டிங்கில் அருமையாக கேட்ச் செய்வதாக இருக்கட்டும் அனைத்திலும் ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்றார்.
இந்திய அணியில் மிகவும் வேடிக்கையான வீரர் விராட் கோலி என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது: ரன்கள் குவிப்பது மட்டுமின்றி விராட் கோலியின் உற்சாகம், எதிரணிக்கு சவாலாக இருக்கும். போட்டி முழுவதுமே அவரிடம் அந்த உற்சாகம் இருக்கும் என்றார்.
அனைத்து இந்திய வீரர்களாலும் நான் கோபமடைவேன் என நாதன் லயன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.