
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 28) அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாடும் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த 4 நாள்களில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடர் மிக முக்கியமான தொடர் என்பதால், ஆஸ்திரேலியாவின் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
சீன் அப்பாட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் இதுவரை எந்த ஒரு வடிவிலான போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தியதில்லை. ஆனால், கிளன் மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா, மேத்யூ ஷார்ட் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் பிக் பாஸ் லீக் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்கள்.
டி20 தொடருக்கான கேப்டன் யார் என அறிவிக்கப்படாத நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.