
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பாஸிட் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்படுள்ளார். பாபர் அசாம் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் நேற்று (அக்டோபர் 27) நியமிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முகமது ரிஸ்வான் காரணமா?
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பாஸிட் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: இந்த எல்லா விஷயங்களும் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்தே தொடங்கியது. முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியை வழிநடத்துவதை கேரி கிறிஸ்டன் விரும்பவில்லை. தற்போது உள்ள அணியில் இருப்பவர்களை தவிர்த்து புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என கிறிஸ்டன் விரும்பினார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு அவ்வாறு இருக்கவில்லை என்றார்.
கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.