விராட் கோலி தன்னுடைய முன்மாதிரி எனவும், ஆர்சிபிக்காக விளையாட விரும்புவதாகவும் டிபிஎல் தொடரில் ஓரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய பிரியன்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளார்.
பிரியன்ஷ் ஆர்யா
தில்லி பிரிமீயர் லீக் தொடரில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த போட்டியில் அவர் 50 பந்துகளில் அதிரடியாக 120 ரன்கள் (10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள்) குவித்து அசத்தினார்.
நடப்பு தில்லி பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட முதல் வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். இதுவரை தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பிரியன்ஷ் ஆர்யா, 602 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவராகவும் வலம் வருகிறார். இதுவரை இரண்டு சதங்களையும் அவர் விளாசியுள்ளார். அவரது சராசரி 75.25 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 198.0 ஆகவும் உள்ளது.
விராட் கோலி எனது முன்மாதிரி (ரோல்மாடல்)
விராட் கோலி தன்னுடைய முன்மாதிரி எனவும், ஆர்சிபிக்காக விளையாட விரும்புவதாகவும் பிரியன்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். நான் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி ஆர்சிபி. விராட் கோலியின் ஆக்ரோஷமான விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் ஆக்ரோஷமாக விளையாடுவது பிடிக்கும்.
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் குறித்து
இடதுகை சுழற்பந்துவீச்சாளர் பந்துவீச வந்தால், அவருக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பது எனது மனதில் இருந்தது. 4 சிக்ஸர்கள் விளாசிய பிறகு, என்னால் 6 சிக்ஸர்கள் அடிக்க முடியும் என நம்பினேன். கேப்டன் ஆயுஷ் பதோனி அதிரடியாக விளையாடு என எனக்கு ஆதரவளித்தார்.
ஆயுஷ் பதோனிக்கு புகழாரம்
ஆயுஷ் பதோனி பதற்றமடையாமல் அமைதியாக இருப்பவர். அவர் அதிகம் பேசமாட்டார். உங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் எனக் கூறுவார்.