
இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ்
இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் இன்று அவரது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் அவர், இதுவரை டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 2432 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் அடங்கும்.
இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 773 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக அவர் இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் பெரிதும் உதவியாக இருந்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 199 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இறுதிப்போட்டியில் எல்லைக்கோட்டில் அற்புதமாக கேட்ச் பிடித்து இந்திய அணி கோப்பையை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
இன்று 34-வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியும், இந்திய அணியின் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 3213 சர்வதேச ரன்கள், 4 சர்வதேச டி20 சதங்கள். இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளது.
ஷிகர் தவான்
சூர்யகுமார் யாதவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் வருகிற ஆண்டு சூர்யகுமார் யாதவுக்கு சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துகள்.
ஜெய் ஷா
இந்திய டி20 அணியின் கேப்டனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக நீங்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தருவதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்களது கிரிக்கெட் பயணம் சிறக்க எனது வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.