
இந்திய அணியின் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் சிறப்பாக்க உதவி செய்ய வேண்டும் என நினைப்பதாவுகம் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் ஏற்கனவே தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
சிறப்பாக செயல்படும் இந்திய கிரிக்கெட்
இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது எனவும், இந்திய அணியில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியை அதேபோல தொடர்ச்சியாக செயல்பட வைப்பதே எங்களது இலக்காக உள்ளது. அணியில் தரமான மூத்த வீரர்கள் இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அணியில் உள்ள வீரர்களுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்குவதே எங்களது வேலையாக இருக்கும்.
இந்திய அணி வீரர்கள் சிலருடன் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. வீரர்களிடம் நன்றாக பழகி அவர்களிடம் நட்பாக இருப்பது மிகவும் முக்கியம். வீரர்களின் பலம் என்னவென்று தெரிந்தால்தான், எதிர்வரும் தொடர்களுக்கு அவர்களுக்கான இலக்குகளை அமைக்க முடியும். இந்திய கிரிக்கெட் நிறைய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது என்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மோர்னே மோர்கல் அந்த அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 544 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் 309 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.