இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேமரூன் கிரீன் (கோப்புப் படம்)
கேமரூன் கிரீன் (கோப்புப் படம்)படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 27) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

கேமரூன் கிரீன் விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு கேமரூன் கிரீனுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுவாரா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணியும், சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலிருந்து காயம் காரணமாக கேமரூன் கிரீன் விலகியுள்ளது, அவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுவரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேமரூன் கிரீன் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கேமரூன் கிரீனுக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து பெர்த்தில் ஆராயப்படவுள்ளது. அதுவரை அவரது காயத்தின் தன்மை குறித்து கூறுவது கடினம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.