பிரபல கிரிக்கெட் நடுவரான அலீம் தர் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
56 வயதாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தர் ஐசிசியின் நடுவர் குழுவில் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்து பல்வேறு போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளுடன் ஓய்வு பெறப்போவதாக அலீம் தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எல்லா பயணங்களும் கண்டிப்பாக முடிவுக்கு வர வேண்டும். சமூக சேவைகள் மற்றும் எனது அறக்கட்டளை தொடர்பான வேலைகளில் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. எனது மருத்துவமனை திட்டம் மற்றும் இதர முன்னெடுப்புகள் அனைத்தும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. அவற்றுக்கு முழு கவனம் கொடுக்கவுள்ளேன்.
கடந்த 25 ஆண்டுகளாக நடுவராக இருந்துள்ளேன். நடுவராக செயல்பட்ட ஒவ்வொரு தருணமும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்தது. பல முக்கியமான போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளேன். பல சிறந்த நடுவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். பாகிஸ்தானிலிருந்து வளர்ந்து வரும் நடுவர்களுக்கு வழிவிட்டு அவர்களுக்கான வாய்ப்பை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
அலீம் தர் 17 முதல் தர போட்டிகளிலும், 18 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முதன் முதலாக அவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நடுவராக செயல்பட்டார்.
இதுவரை அலீம் தர் 145 டெஸ்ட், 231 ஒருநாள், 72 டி20 போட்டிகள் மற்றும் 5 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் நடுவராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.