ஷகிப் அல் ஹசனின் பாதுகாப்பு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கைகளில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக் அகமது தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (செப்டம்பர் 27) தொடங்கியது.
பாதுகாப்பு எங்கள் கைகளில் இல்லை
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால், அவரது பாதுகாப்பு தங்களது கைகளில் இல்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷகிப் அல் ஹசனின் பாதுகாப்பு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கைகளில் இல்லை. தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு கிரிக்கெட் வாரியத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துத் தர முடியாது. இந்த விஷயத்தில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் காவல் துறையைப் போன்று பாதுகாப்பு அமைப்பு அல்ல. ஷகிப் அல் ஹசன் தொடர்பாக நாங்கள் யாரிடமும் பேசவில்லை. அந்த விவகாரத்தில் எங்களால் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாது.
ஷகிப் அல் ஹசன் அவரது வாழ்க்கையில் மிகவும் கடினமான காலக் கட்டத்தில் இருக்கிறார். அவரிடம் ஓய்வு முடிவு குறித்து பேச முயற்சிக்கவில்லை. ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என அவர் நினைத்துள்ளார். அவரது முடிவை நான் மதிக்கிறேன் என்றார்.
கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். கொலை தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷகிப் அல் ஹசனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.