நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் 182* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் 116 ரன்களும், குசல் மெண்டிஸ் 106* ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வரலாற்று வெற்றி
ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. டாம் பிளண்டெல் 47 ரன்களுடனும், கிளன் பிளிப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணி இலங்கையைக் காட்டிலும் 315 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்று (செப்டம்பர் 29) நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டாம் பிளண்டெல் மற்றும் கிளன் பிளிப்ஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். பிளண்டெல் 60 ரன்களிலும், கிளன் பிளிப்ஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கியவர்களில் மிட்செல் சாண்ட்னர் அரைசதம் கடந்தார். அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 360 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும், தனஞ்ஜெயா டி சில்வா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல, இந்த டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணி நன்கு ஆதிக்கம் செலுத்தி பெற்ற வெற்றியாகும்.
சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த கமிந்து மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும், அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியையும் சேர்த்து இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர்ச்சியான வெற்றிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணியையும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியாளராக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.