
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றமளித்தாலும், நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பரபரப்பாக சென்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
போட்டியின் நான்காம் நாள் வரை இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இருப்பினும், கடைசி நாளில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அசத்தலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பணிந்தது. கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் மீதமிருந்தும், இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியவில்லை.
பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால், கடுமையான போட்டிக்குப் பிறகு நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக நினைக்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே இந்த தொடர் முழுமையானதாக மாறிவிட்டதாக நினைக்கிறேன். முதல் நான்கு போட்டிகளும் ஐந்து நாள்கள் வரை நீடித்தன. கடைசிப் போட்டியும் ஐந்தாவது நாள் வரை வந்துள்ளது. இந்த 25 நாள்களும் மிகவும் சுவாரசியமானதாகவும், பரபரப்பானதாகவும் இருந்தது. இரண்டு அணிகளும் மிகவும் சிறந்த அணிகள். வெற்றி பெறுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் இரண்டு அணியில் உள்ள வீரர்களும் கொடுத்தார்கள். கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் 2-2 என தொடர் சமனில் முடிந்துள்ளது நியாயமனான முடிவாகவே உள்ளது என்றார்.
தோள்பட்டை காயம் காரணமாக ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.