

நீண்ட வடிவிலான போட்டிகளில் (ஒருநாள், டெஸ்ட்) விளையாடுவதை மிகவும் விரும்புவதாக இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் அறிமுகமாகவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா, அதிக அளவிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளே எனக்கான போட்டிகள் என உணர்கிறேன். ஏனெனில், நீண்ட வடிவிலான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு உற்சாகமாக காத்திருக்கிறேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் அணியில் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
அவர்கள் இருவரும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவர்களிடம் அறிவுரைகளை கேட்டுக் கொள்ள முயற்சி செய்வேன். விராட் கோலியிடம் உடல்தகுதி குறித்தும், வேகமாக ரன்கள் எடுக்க ஓடுவது குறித்தும் அதிகம் பேசுகிறேன். அவர் ரன்கள் எடுக்க மிகவும் வேகமாக ஓடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் வேகமாக ரன்கள் எடுக்க ஓடுவதாக உணர்கிறேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நன்றாக பயன்படுத்தி போட்டியை முடித்து கொடுக்க விரும்புகிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என்னை நிரூபித்துக் கொள்ள விரும்புகிறேன். நீண்ட வடிவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற சவாலை எனக்கு நானே எடுத்துக் கொண்டு சிறந்த வீரராக உருவெடுக்க விரும்புகிறேன் என்றார்.
இதையும் படிக்க: அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்ற வங்கதேசம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.