சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கொடியை பாகிஸ்தான் புறக்கணித்ததா?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய கொடி புறக்கணிக்கப்பட்டதா என்பது தொடர்பாக...
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கொடியை பாகிஸ்தான் புறக்கணித்ததா?
படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்திய கொடி ஏற்றப்படாததற்கு காரணம் என்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகள் நடத்தப்படும் பாகிஸ்தான் மைதானங்களில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட முடியாது என இந்திய அணி ஏற்கனவே உறுதிபட தெரிவித்துவிட்டது. அதனால், இந்திய அணிக்கான அனைத்துப் போட்டிகளும் துபையில் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியாவின் கொடி வேண்டுமென்றே ஏற்றப்படவில்லையா என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் கிளம்பின.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் மைதானங்களில் விளையாடவுள்ள நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்திய அணி அதன் போட்டிகளை துபையில் விளையாடவுள்ளது. வங்கதேச அணி அதன் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி துபையில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் வந்தடையாததால் வங்கதேச அணியின் கொடி ஏற்றப்படவில்லை. பாகிஸ்தான் வந்தடைந்த அணிகளின் கொடிகள் மட்டுமே தற்போது ஏற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய்யான செய்தியை பரப்பி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்துக்கு விளக்கமளிக்க அவசியமில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் இந்திய அணியின் கேப்டன் உட்பட அனைத்துக் கேப்டன்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியை புறக்கணிக்கும் எந்த ஒரு எண்ணமும் எங்களுக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com