பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.
சுனில் கவாஸ்கர் அதிருப்தி
இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்ற வெற்றியாளருக்கு கோப்பையை வழங்குமிடத்தில் இருப்பதை கண்டிப்பாக விரும்பியிருப்பேன். எல்லா விஷயங்களையும் கடந்து, இது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால், நான் கோப்பையை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளையாடியதால், வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால், ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடந்த 1996-1997 ஆம் ஆண்டு முதல் பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெயரில் நடத்தப்படும் இந்த டெஸ்ட் தொடர், உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொடர்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.