ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா
விராட் கோலி, ரோஹித் சர்மாபடம் | AP
Published on
Updated on
2 min read

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவு

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் (கோப்புப் படம்)
யுவராஜ் சிங் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததைக் காட்டிலும், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததையே மிகப் பெரிய ஏமாற்றமாகக் கூறுவேன். ஏனெனில், சொந்த மண்ணில் 3-0 என என தொடரை முழுமையாக இழந்தோம். அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை நாம் தொடரை வென்றுள்ளோம். இந்த முறை தோல்வியடைந்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நமது இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து நாம் பேசுகிறோம். அவர்களைப் பற்றி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம். கடந்த காலங்களில் அவர்கள் என்ன சாதனைகள் செய்தார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவர்கள் இருவரும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். நாம் தோற்றுவிட்டோம். அவர்கள் சரியாக விளையாடவில்லை. அவர்கள் சரியாக விளையாடாதது நம்மைக் காட்டிலும் அவர்களுக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என நினைக்கிறேன். வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அவர் எப்போதும் மிகச் சிறந்த கேப்டனாக இருப்பார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. அவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

என்னைப் பொருத்தவரையில், வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்களைப் பற்றி எளிதில் மோசமாக விமர்சித்து விடலாம். ஆனால், அவர்களுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் கடினம். அவர்களைப் பற்றி மோசமாக பேசுவது ஊடகங்களின் வேலை. எனது நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் ஆதரவாக பேசுவது எனது வேலை. அவர்கள் இருவரும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.