ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியாளரே மீண்டும் மாற்று வீரராகக் களமிறங்கியுள்ளார்.
கடந்த 2 சீசன்களாக சிட்னி அணியின் பயிற்சியாளராக இருக்கும் 41 வயதான டேன் கிறிஸ்டியன், அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் விலகி வருவதால் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக பெர்த் அணிக்கு எதிரான போட்டியில் மேலே அடிக்கப்பட்ட பந்தை பிடிக்க முயன்ற போது சிட்னி வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் பான்கிராப்ட் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சாம்ஸ் சுயநினைவை இழந்த நிலையில், பான்கிராஃப்ட்டுக்கு மூக்கு உடைந்தது மட்டுமின்றி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்களைத் தவிர்த்து தன்வீர் சங்கா தசைப் பிடிப்பாலும், ஜேசன் சங்கா கையில் காயத்தாலும் விலகியுள்ளனர். மேலும், 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் தொடரில் கலந்து கொண்டதாலும் வேறு மாற்று வீரர்கள் இன்றி, பயிற்சியாளர் டேன் கிறிஸ்டியன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். டேன் கிறிஸ்டியன் 2022-2023 ஆம் ஆண்டு தொடரில் சிட்னி அணிக்காக விளையாடினார்.
அதன்பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பேன் ஹீட்ஸ்க்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 23 ரன்கள் எடுத்த டேன் கிறிஸ்டியன், 92 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதுகுறித்து சிட்னி அணியின் பொது மேலாளர் ட்ரெண்ட் கோப்லேண்ட் கூறும்போது, “டேன் கிறிஸ்டியன் அணியில் இருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
He's got a wicket!
— KFC Big Bash League (@BBL) January 6, 2025
Dan Christian has dismissed Nathan McSweeney at The Gabba. #BBL14 pic.twitter.com/d4N5GXcw3q
டி20 போட்டிகளில் ஜாம்பவானாகக் கருதப்படும் டேன் கிறிஸ்டியன் உலகளவில் 6 வெவ்வேறு நாடுகளில் 18 வெவ்வேறு அணிகளுக்காக 409 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்காக 43 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மூன்று முறை பிபிஎல் பட்டங்களையும் வென்றுள்ளார். அதில் பிரிஸ்பேன் ஹீட், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்கள் அணிகளும் அடங்கும்.
சிட்னி அணி வீரர்கள் விவரம்:
டேவிட் வார்னர் (கேப்டன்), வெஸ் அகர், டாம் ஆண்ட்ரூஸ், சாம் பில்லிங்ஸ், டேன் கிறிஸ்டியன், ஒல்லி டேவிஸ், லாக்கி பெர்குசன், மாட் கில்க்ஸ், டோபி கிரே, கிறிஸ் கிரீன், லியாம் ஹாட்சர், பிளேக் நிகிதாராஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஹக் வெய்ப்ஜென்.
Dan Christian!
— KFC Big Bash League (@BBL) January 6, 2025
The 41-year-old has just smashed this Xavier Bartlett delivery 92 metres! #BBL14 pic.twitter.com/ZgbVIt9yeC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









