
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முழு உடல்தகுதியுடன் இருப்பார் என ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணி முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூனில் நடைபெறவுள்ளது.
கேமரூன் கிரீன் விளையாடுவாரா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளையாடும் அளவுக்கு முழு உடல் தகுதியுடன் இருப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியார்ஜ் பெய்லி பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் அளவுக்கு கேமரூன் கிரீன் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.
25 வயதாகும் கேமரூன் கிரீன், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவில்லை. அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் விரைவில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கிரீன் தயாராக இருப்பார் என ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் விடியோவினை கேமரூன் கிரீன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.