ஆஸ்திரேலிய இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கான்ஸ்டாஸ். அறிமுகப் போட்டியில் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த அவர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 113 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது கடினம்
டெஸ்ட் போட்டிகளில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டுமென்றால், அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எனவும், எப்போதும் அதிரடியாக விளையாடுவதை மட்டும் தொடர விரும்பினால் அவரால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: எல்லா முறையும் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாது என நினைக்கிறேன். அதனால், முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியதிலிருந்து அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார்.
நிறைய இளம் வீரர்களை பார்த்துள்ளேன். அவர்கள் அணிக்குள் வரும்போது, அனைத்து விஷயங்களிலும் சிறிது அதீத ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் யார் என்பதையும், சர்வதேச அரங்கில் எந்த மாதிரியான வீரராக உருவாக விரும்புகிறார்கள் என்பது குறித்தும் சில போட்டிகளில் விளையாடிய பிறகே, அவர்கள் கவனம் கொடுக்கத் தொடங்குவார்கள் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.