சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிம் இக்பால்
தமிம் இக்பால்படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த தமிம் இக்பால், அந்த அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 387 போட்டிகளில் விளையாடியுள்ளார். வங்கதேச அணிக்காக அவர் 15,192 ரன்கள் குவித்துள்ளார். முஷ்ஃபிகர் ரஹிமுக்கு அடுத்தபடியாக, வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை இவரையே சேரும்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து தமிம் இக்பால் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நான் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாள்களாக விளையாடவில்லை. அது அப்படியே தொடரப் போகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் எனது அத்தியாயம் முடிந்துவிட்டது. எனது ஓய்வு முடிவு குறித்து நீண்ட காலமாக யோசித்து வந்தேன். சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப் பெரிய தொடர்கள் வரவிருக்கின்றன.

யாருடைய கவனத்தையும் சிதறடிக்க நான் விரும்பவில்லை, என்னைப் பற்றி யோசிக்கும் நேரத்தில் வங்கதேச அணி அதன் கவனத்தை சிதறவிட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு நடைபெறுவதை நான் விரும்பவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, என்னை அணியில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டார். அணித் தேர்வுக்குழுவிலும் இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது. அணியில் நான் இடம்பெற வேண்டும் என்ற அவர்களது எண்ணத்திற்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இருப்பினும், என்னுடைய மனது கூறுவதைக் கேட்டு நடக்க விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

35 வயதாகும் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,134 ரன்கள் குவித்துள்ளார். 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,357 ரன்களும், 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களும் குவித்துள்ளார்.

அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த தமிம் இக்பால், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com