
ஆஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் போன்ற வீரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், இந்த வீரர்கள் அனைவரும் அவர்களது 30 வயதினைக் கடந்து விளையாடி வருவதால், அடுத்த தலைமுறை வேகப் பந்துவீச்சாளர்களை உருவாக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரரான ஆடம் கிரிஃபித்தை வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
46 வயதாகும் ஆடம் கிரிஃபித், ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோருடன் இணைந்து செயல்படவுள்ளார்.
இதற்கு முன்னதாக, விக்டோரியா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆடம் கிரிஃபித் செயல்பட்டுள்ளார். டஸ்மானியா மற்றும் பிபிஎல் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், எம்எல்சி தொடரில் சான் பிரான்சிஸ்கோ அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இருதரப்பு தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியுடனும் இவர் இணைந்து செயல்பட்டுள்ளார். கடந்த 2012, 2016 மற்றும் 2019 உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் ஆடம் கிரிஃபித் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.