முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; இலங்கை தடுமாற்றம்!
படம் | AP

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; இலங்கை தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 29) காலேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள்

ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 352 பந்துகளில் 232 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் (12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஜோஷ் இங்லிஷ் 102 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஓஷதா ஃபெர்னாண்டோ மற்றும் திமுத் கருணாரத்னே தலா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 610 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்