இன்னும் நிறைய ஓய்வு அறிவிப்புகள் வரலாம்; நிக்கோலஸ் பூரன் ஓய்வுக்குப் பின் டேரன் சம்மி கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.
nicholas pooran
நிக்கோலஸ் பூரன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தித் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூன் 10) அறிவித்தார். ஓய்வு முடிவை அறிவித்த அடுத்த நாளே (ஜூன் 11) அவர் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேரன் சம்மி கூறுவதென்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் திடீரென அறிவித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் அதிகரித்துவிட்டதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவது போன்ற விஷயங்கள் நடைபெறும் என என்னுடைய உள்ளுணர்வு கூறியது. நிக்கோலஸ் பூரன் போன்ற திறமையான வீரர் ஒருவர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். ஆனால், என்னால் யாருடைய முடிவுகளையும் கட்டுப்படுத்த முடியாது. அவருடைய எதிர்கால பயணம் சிறப்பாக இருக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டி20 உலகக் கோப்பை இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக நிக்கோலஸ் பூரன் அவரது ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். அதனால், டி20 உலகக் கோப்பைக்கு அவர் இல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் எப்படி தயாராகப் போகிறது என்பதை திட்டமிட எங்களுக்கு நேரம் இருக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் இதுபோன்ற ஓய்வு அறிவிப்புகள் தொடரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். தற்போது, உலகெங்கிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் அந்த அளவுக்கு பிரபலமாக உள்ளன.

கிளாசன், டி காக் போன்ற வீரர்களின் ஓய்வு முடிவு குறித்து அனைவரும் பேசுவதை பார்க்க முடிகிறது. இந்த முடிவுகள் எதுவுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. வீரர்கள் ஓய்வு பெறுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெறாதீர்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com