கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பேசியுள்ளார்.
australian opener usman khawaja
உஸ்மான் கவாஜாபடம் | AP
Published on
Updated on
2 min read

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா அணியின் வெற்றிக்கு உதவினர்.

கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடவில்லை. டாப் ஆர்டர் ரன்கள் குவிக்காததே தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான உஸ்மான் கவாஜா (0 ரன், 6 ரன்கள்) மார்னஸ் லபுஷேன் (17 ரன்கள், 22 ரன்கள்) மற்றும் கேமரூன் கிரீன் (4 ரன்கள், 0 ரன்) மூவரும் இணைந்து இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இலங்கைக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரட்டைச் சதம் விளாசியதை தவிர்த்து, அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் உஸ்மான் கவாஜா பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால், அவருடைய கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தத்தில் கவாஜா இருக்கிறார். அவர் மிகவும் முக்கியமான வீரர். தொடக்க ஆட்டக்காரராக அவருடைய சிறப்பான ஆட்டத்தை அணிக்காக வழங்கி வருகிறார். சில போட்டிகளில் சரியாக செயல்படவில்லை என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடவில்லையென்றால், வீரர் ஒருவரின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

உஸ்மான் கவாஜா பயிற்சி மேற்கொள்வதை பார்க்கும்போது, அவரது கிரிக்கெட் பயணத்தின் முடிவு அருகில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் கடுமையாக பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்த சீசனில் ஷீல்டு கிரிக்கெட்டில் விளையாடி சதம் விளாசினார். அவர் அணிக்காக இன்னும் நிறைய ரன்கள் குவிக்கவுள்ளார். டேவிட் வார்னரைப் போன்று கவாஜாவும் அணிக்காக சிறப்பாக ரன்கள் குவிக்கிறார். அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும் என்றார்.

38 வயதாகும் உஸ்மான் கவாஜா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com