ககிசோ ரபாடா
ககிசோ ரபாடாபடம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ககிசோ ரபாடாவுக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
Published on

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ககிசோ ரபாடாவுக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ககிசோ ரபாடா நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதன் பின், தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்புவதாகக் கூறி தாயகம் திரும்பினார்.

இந்த நிலையில், அண்மையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியளித்தார் ரபாடா. மேலும், தனது செயலுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்னை கிடையாது

ககிசோ ரபாடா ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், இது தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தாக்கிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டிம் பெயின் (கோப்புப் படம்)
டிம் பெயின் (கோப்புப் படம்)

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது: இது மிகவும் கேவலமானது. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு விஷயத்தை மறைப்பதற்காக முயற்சி செய்வது தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள். ஒரு தொடரின்போது, ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன். நீங்கள் உங்களது ஒப்பந்தத்தை மீறியுள்ளீர்கள் என்றே கூறுவேன். இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது.

ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதால் தடை விதிக்கப்பட்டது என்றால், அவர் என்ன மாதிரியான ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார். எப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது, அவருக்கு எவ்வாறு ஊக்கமருந்து கிடைத்தது, ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின்போது, ரபாடா ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாகவும், இடைக்காலத் தடை நிறைவடைந்ததால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடலாம் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com