இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களது ஓய்வு முடிவு அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் இந்திய அணியைக் கேப்டனாக யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பிரதான தெரிவுகளாக உள்ளனர். மேலும், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த போட்டியில் இருக்கின்றனர்.

வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான விவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா முதல் தெரிவாக இருப்பார் எனவும், அவருக்கு ஓய்வு தேவைப்படும்போது ஷுப்மன் கில் அணியை வழிநடத்த வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)
வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக வாசிம் ஜாஃபர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு வேண்டாம் என மறுக்காத பட்சத்தில், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட ஜஸ்பிரித் பும்ராவே முதல் தெரிவாக இருப்பார். அவர் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் செயல்பட வேண்டும்.

பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும்போது, ஷுப்மன் கில் அணியைக் கேப்டனாக வழிநடத்த வேண்டும். இப்படி செய்வதால், முழுநேரக் கேப்டன் பொறுப்பின் அழுத்தம் ஷுப்மன் கில்லுக்கு இருக்காது. மிகப் பெரிய அழுத்தமின்றி ஷுப்மன் கில் அணியில் கேப்டனாக வளர அது உதவும் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியை 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா கேப்டனாக செயல்படுவதற்கு அவரது உடல் தகுதி மட்டுமே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. இந்த காயம் காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட முடியாமல் போனது.

3 டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அவரது தலைமையில் கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளராக அவரும் வரிசையில் இருக்கிறார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இதற்கு முன்பாக கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின், இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. அதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com