இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம்வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்விருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், நட்சத்திர ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் துணை கேப்டனாகவும் சில போட்டிகளில் பொறுப்பு கேப்டனாகவும் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல். ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால், இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற சந்தேகம் எழுந்தது. இதன்காரணமாக இன்று(மே 24) மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இந்திய அணித் தேர்வர் அஜித் அகர்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் வாய்ப்பு 25 வயதான இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமியக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவரும் ஷுப்மன் கில் இந்திய அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரரான ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில், 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1893 ரன்கள் குவித்திருக்கிறார்.
ஜூன் 20 ஆம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியை ஷுப்மன் கில் வழிநடத்த உள்ளார்.
இதையும் படிக்க: பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.