விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியின் சாதனைகளும் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய தேவையும் பற்றி...
சிட்னியில் நடைபெற்ற போட்டியின்போது விராட் கோலியைப் பார்த்த ஆரவாரத்தில்...
சிட்னியில் நடைபெற்ற போட்டியின்போது விராட் கோலியைப் பார்த்த ஆரவாரத்தில்...படம்: ஏபி
Published on
Updated on
3 min read

_“உங்க கிரிக்கெட் வீரர்களிலேயே விராட் கோலிதான் சிறப்பான ஆஸ்திரேலியர். எங்கள் வீரர்களைப் போலவே அவரும் எதிரணி வீரர்களைக் குழப்பிவிடுவார்” _ இது லிங்கன் துறைமுகத்தைச் சேர்ந்த முத்துக்குளிப்பவரான டொமினிக் ஹெண்டர்சன் காலை உணவின்போது என்னிடம் கூறியது.

அக். 26 ஆம் தேதி - சிட்னி ஒரு நாள் போட்டிக்கு அடுத்த நாள் காலை, அந்த நகரின் உயரமான 75 மாடிக் கட்டடமான கிரௌன் டவர்ஸில் உள்ள எபிகியூரியன் உணவகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.

விராட் கோலியை அனைவருக்கும் தெரியும், இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 74* குவித்துக் களத்தில் இருந்தார். ஆனால், தொடர்ச்சியாக முதலிரண்டு போட்டிகளில் ரன் ஏதுமின்றி வெளியேறிய பின்னர் வந்தவை இந்த ரன்கள். இதுவரை 305 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலிக்கு இதுபோன்று நிகழ்ந்ததே இல்லை. ஒருநாள் போட்டிகளில் 16 முறை ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆகியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் இவ்வாறு ஆனது இல்லை.

ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, அவரின் ரசிகர்கள் பலருக்கும் இருந்த கேள்வி, அவர் ஆஸ்திரேலியர்களைக் குழப்பப் போகிறாரா என்பதைப் பற்றி அல்ல. அவரது மனதில் எவ்வளவு குழப்பங்கள் இருக்கும் என்பதைப் பற்றிதான்.

போட்டிக்கு ஒருநாள் முன் நாங்கள் பார்க்க வந்த சிட்னி கிரிக்கெட் திடலில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் இந்தியா கார்னர் பகுதியில் இந்தியர்களைப் பெருமை சேர்க்கும் வகையில் விராட் கோலியின் படம் இடம்பெற்றிருந்தது. கூடவே, சிட்னியில் நாம் காணவிருக்கும் கடைசி ஆட்டம் இதுதானா? என்பது குறித்த கவலைகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

ஒருநாள் போட்டியைக் காண்பதற்காக ஆஸ்திரேலியா வந்திருந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான ரோஹித் கௌல், காசு சுண்டுதலுக்கு முன் பேசுகையில், இன்றையப் போட்டியில் விராட் கோலி சதமடிப்பார் என்றார்.

அவர் கூறியதுபோலவே விராட் கோலியும், அவரின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அற்புதமான ஆட்டத்தைக் காட்டினார். 2 கேட்ச்களையும் பாய்ந்து பிடித்தார். அவர் பேட்டிங் செய்தபோது, அவரது ஆட்டத்துக்கு வயது ஒரு தடையில்லை என்பதையும், அவரின் சிறந்த ஆட்டத்தின் திறனை மங்கச் செய்யவில்லை என்பதையும் அடிக்கோட்டிட்டுக் காட்டியதாகவே தோன்றியது.

ஆம், விராட் கோலிக்கு சில அதிர்ஷ்டங்களும் கைகொடுத்தன. கௌல் சொன்னது போலவே விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிட்னி கிரிக்கெட் திடலில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் படம்.
சிட்னி கிரிக்கெட் திடலில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் படம்.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆன பின்னர், மூன்றாவது போட்டியில் முதல் ரன்னுக்கு பின்னர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு ரசிகர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தார் விராட் கோலி.

சிட்னியில் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் விராட் கோலி பேசியபோது, “சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் நிறைய ரன்கள் குவித்திருக்கலாம். ஆனால், விளையாட்டு உங்களுக்கு எல்லாவற்றையும் காட்டுகிறது. இன்னும் சில நாள்களில் 37 ஆகப் போகிறது. இன்னும் எப்படி ரன் எடுப்பது என்று தெரியவில்லை. இந்த ஆட்டம் அற்புதமாக இருந்தது என்றுதான் கூறுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

விளையாட்டில் பணிவும் வேட்கையும் இருக்க வேண்டும். இவை இரண்டும் வருங்காலத்திற்கு நல்ல அறிகுறிகளாகும்.

இன்று (நவ. 5) விராட் கோலிக்கு 37 வயதாகிறது. இந்தியாவில் கிரிக்கெட்டைப் பின்தொடரும் அனைவரும், அற்புதமான விளையாட்டின் மீது அன்பைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரருக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவரின் எதிர்காலம் குறித்த ஊகங்களைத் தவிர்த்துவிட்டு அவரை விட்டுவிடுவதே அவருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கலாம். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் சில போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும்கூட, அந்த மனிதரின் சாதனைகளையும் பாருங்களேன்.

சிட்னியில் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு அவர் முன்னேறியிருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர் (51 சதங்கள்) பட்டியலில் முதலிடத்திலும், இதே ஒருநாள் போட்டியில் சிறந்த சராசரியுடன் (57.71) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலிக்கு முன்னதாக அதிக சராசரி கொண்டுள்ள இரண்டு வீரர்கள் இருக்கின்றனர். ஒருவர் மிலிந்த் குமார் - இவர் 22 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் சராசரி 67.73. மற்றொருவர் ரியான் டென் டோஸ்ஷேட் - இவர் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அவற்றில் பெரும்பாலானவை சிறிய அணிகளுக்கு எதிரானவை. இவரின் சராசரி  67.

அவரது சராசரி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைவிட 13 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ‘தி ஒரிஜினல் கிங்’ விவியன் ரிச்சர்ட்டைவிட 10 ரன்களும் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து 40 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். 59.47 சராசரியுடன் 1784 ரன்களைக் குவித்துள்ளார். அதில், 7 சதங்களை விளாசியிருக்கும் நிலையில், 6 சதங்கள் 2023 ஆண்டிலேயே பதிவாகியுள்ளன. அவருக்கு வயது வேண்டுமானாலும் 37 ஆக இருக்கலாம். ஆனால், இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராகவும், மிகவும் உடல் தகுதி வாய்ந்த வீரராகவும் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கரைப் பொருத்தவரையில் தனது 37 வயதில்தான் 2010 ஆம் ஆண்டில் பிப்ரவரி 4 ஆம் தேதி குவாலியரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளிலும் இதுதான் முதல் இரட்டை சதம்.

சுநீல் காவஸ்கரைப் பொருத்தவரையில், அவர் 37 வயதைக் கடந்து 38 வயதை எட்டியபோதுதான் அவர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர்களுடன் ஒப்பிடும்போது விராட்கோலி நிறையவே செய்துள்ளார். பிறகு எதற்காக நாம் அவரைக் குறைத்து மதிப்பிட வேண்டும்?

இந்திய அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பையை (1983) வென்ற அணியில் இடம்பெற்ற தமிழக வீரரும், சுநீல் காவஸ்கரின் தொடக்க ஆட்டக்காரருமான கே. ஸ்ரீகாந்த், சிட்னி போட்டிக்குப் பின்னர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “அணித் தேர்வர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அவர்களின் இடத்தை உறுதி செய்யவேண்டும். அவர்கள் அணிக்கு மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரான கே. ஸ்ரீகாந்த், “இரண்டு முக்கியமான வீரர்களையும் பயமுறுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்திருக்கிறார். அவர் சொல்வதும் சரிதான்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 11 கிலோ வரை எடையைக் குறைத்து, தொடர்ந்து ரன்களைக் குவித்து தனது அர்ப்பணிப்பு என்ன என்பதைக் காட்டியுள்ளார். விராட் கோலியிடம் குறைப்பதற்குப் போதுமான அளவு எடை இல்லை என்றாலும், அவர் அணியில் இருக்கத் தேவையான சிக்னலை காட்டியுள்ளார்.

சிட்னி போட்டியில் சிறிதும் சந்தேகமின்றி நிரூபித்தது போன்று, விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் கூட்டத்தை ஈர்க்கும் வீரராகவும், இந்திய அணியின் நட்சத்திரமாகவும் இருக்கிறார். கோலியைப் பார்ப்பதற்காகவே பலரும் திடல்களில் குவிகின்றனர்.

உலகக் கோப்பை அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் இருப்பதை அணித் தேர்வர்கள் திட்டவட்டமாக தெரிவிப்பது, இந்திய கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களும் வழங்கக் கூடிய மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

சிட்னியில் நடந்தது போல மீண்டும், இந்திய அணியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இடம்பெறுவார்களா என்பது குறித்த கேள்விகள் எழுவதை நாம் விரும்பவில்லை.

இல்லையா, அஜித் அகர்கர் பாய்? என்ன சொல்றீங்க?

[கட்டுரையாளர், டெஸ்டினேஷன் நியு சௌத் வேல்ஸ் அழைப்பின் பேரில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி சிட்னிக்குச் சென்றிருந்தவர்].

சிட்னியில் நடைபெற்ற போட்டியின்போது விராட் கோலியைப் பார்த்த ஆரவாரத்தில்...
அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Summary

The best birthday present Indian cricket can line up for Virat Kohli: Faith

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com