

பாகிஸ்தான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி நாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி தெரிவித்திருப்பதால் வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அடுத்ததாக 2, 3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15 ஆம் தேதிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டி திடலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ராவல்பிண்டி அருகேவுள்ள இஸ்லாமாபாத்தில் நவ. 11 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணமாக 8 வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளை ரத்து செய்துவிட்டு, இலங்கை வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டிகளை ரத்து செய்துவிட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருப்பது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்திருப்பதாகவும், முடிவை மீறி வீரர்கள் நாடு திரும்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.