

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததற்காக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றி பெற்றது.
கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி, கடந்த 16 மாதங்களில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 3-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று தோல்விக்குப் பிறகு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. அவரைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் அணியை போட்டிக்குத் தயார் செய்ய மட்டுமே முடியும் எனவும், ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடுவது வீரர்களின் கைகளில்தான் இருக்கிறது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர். பயிற்சியாளர் அணியை அவரது அனுபவத்திலிருந்து போட்டிகளுக்கு தயார் மட்டுமே செய்ய முடியும். ஆனால், ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவது தனிப்பட்ட வீரர்களின் கைகளில்தான் இருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கு கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுபவர்களுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.
கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது என்ன செய்தீர்கள்? ஆசிய கோப்பையை வென்றபோது என்ன செய்தீர்கள்? தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீரை நீக்க வேண்டும் எனக் கூறுபவர்கள், அவர் தலைமையில் வெற்றி பெற்றபோது, அவரது தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமென ஏன் கேட்கவில்லை. அணி சரியாக விளையாடாவிட்டால் மட்டுமே தலைமைப் பயிற்சியாளர் கண்ணுக்குத் தெரிகிறார்.
அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் செயல்படுகிறார். நிறைய நாடுகள் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது. ஆனால், அணி தோல்வியடைந்தால், யார் மீது பழி சுமத்தலாம் என்றே நாம் நினைக்கிறோம். கௌதம் கம்பீரை நீங்கள் பாராட்ட நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை வெற்றிகளுக்கு அவரைப் பாராட்டாத நபர்கள், எதற்காக தற்போது அவர் மீது பழிசுமத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.