
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தபோதிலும், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா சாதாரண வீரராக அணியில் இடம்பெற்றார்.
பிசிசிஐ-ன் இந்த முடிவு கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என சிலரும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக பிசிசிஐ சரியான முடிவை எடுத்துள்ளது என சிலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது நியாயமான முடிவு எனவும், பிசிசிஐ மோசமான முடிவை எடுக்கவில்லை எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படுவது குறித்து, பிசிசிஐ ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்துவிட்டுதான் இந்த முடிவை எடுத்திருக்கும் என நினைக்கிறேன். வெளியிலிருந்து பார்க்க அப்படிதான் தெரிகிறது. ஆனால், உள்ளுக்குள் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது நியாயமான முடிவு என நினைக்கிறேன். ரோஹித் சர்மா அணியில் விளையாடும்போதே, புதிய கேப்டனான ஷுப்மன் கில்லை பிசிசிஐ தயார் செய்ய நினைக்கிறது. அதனால், இதில் எந்த ஒரு பிரச்னை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.
நன்றாக விளையாடுகிறாரா? இல்லையா? என்பது இங்கு பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின்போது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும். இது தொடர்பாக ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ தரப்பிலிருந்து கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும். அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து அவரைத் தூக்கியதாக நான் பார்க்கவில்லை. இந்த முடிவை பரஸ்பரம் இருவரும் சேர்ந்து எடுத்ததாகவே நினைக்கிறேன்.
ரோஹித் சர்மா மிகச் சிறந்த அணித் தலைவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய அணிக்காக ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடப் போவதில்லை. 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின்போது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும். 40 என்பது விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய எண். அதனால், பிசிசிஐ-ன் முடிவினை மோசமான முடிவாக நினைக்கவில்லை. இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கக் கூடியதே என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.