
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லபுஷேன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சரியாக விளையாடவில்லை. அவர் விளையாடிய கடந்த 49 சர்வதேசப் போட்டிகளில் அவரால் ஒரு முறை கூட சதம் விளாச முடியவில்லை. இந்த 49 போட்டிகளில் அவரது சராசரி 30-க்கும் குறைவாகவே உள்ளது.
டெஸ்ட் போட்டிகளிலும் அவரது மோசமான ஃபார்ம் பேசுபொருளாக மாறியுள்ளது. கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லபுஷேன் சதம் விளாசியிருந்தார். அதன் பின்,16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம்கூட விளாசவில்லை. அண்மையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றபோதிலும், அவர் ஒரு போட்டியில்கூட பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளிலும் அவரது மோசமான ஃபார்ம் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது. கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 10 போட்டிகளில் அவரால் அரைசதம்கூட விளாச முடியவில்லை.
இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. அதில் லபுஷேனின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் மார்னஸ் லபுஷேன் ரன்கள் குவித்து வருகிறார். ஒன் டே கப் தொடரில் அவர் இரண்டாவது சதம் விளாசி அசத்தியுள்ளார்.
தஸ்மானியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய லபுஷேன் 91 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்பாக, விக்டோரியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 130 ரன்கள் எடுத்தார். ஒன் டே கப் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 237 ரன்களுடன் லபுஷேன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அண்மையில், தஸ்மானியாவுக்கு எதிரான ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் 160 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்த மாதம் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவதற்காக லபுஷேன் கடினமாக உழைத்து வருகிறார்.
உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி ரன்கள் குவித்து வரும் லபுஷேன், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.