2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால்... ரோஹித், கோலி செய்ய வேண்டியதென்ன?
வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட விரும்பினால், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின், இந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தனர்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டபோதிலும், இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 2027 உலகக் கோப்பைத் தொடரிலும் ஷுப்மன் கில்லே அணியைக் கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது.
ரோஹித், கோலி செய்ய வேண்டியதென்ன?
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்தால், அவர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதன் பின், இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கு இடையே விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெறவுள்ளது. பிசிசிஐ தரப்பிலிருந்து வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் மற்றும் கோலி விளையாட விரும்பும் பட்சத்தில், அவர்கள் விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டும் என்பது பிசிசிஐ தரப்பில் எதிர்பார்க்கப்படும். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை அணித் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரும் வலியுறுத்தியிருந்தார்.
விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் மற்றும் கோலி விளையாடுவது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், 5 வாரங்கள் உள்ளன.
விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 24 மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி இடைவெளியில் 6 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட ரோஹித் சர்மா குறைந்தது மூன்று சுற்றுப் போட்டிகளிலாவது விளையாட வேண்டும். விராட் கோலிக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி, 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் இலக்கை நோக்கி நகர்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Regarding Rohit Sharma and Virat Kohli playing in the upcoming 2027 ODI World Cup...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.