
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று (அக்டோபர் 12) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல் ஹக் மற்றும் சல்மான் அகா இருவரும் தலா 93 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஷான் மசூத் 76 ரன்களும், முகமது ரிஸ்வான் 75 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் செனுரான் முத்துசாமி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
டோனி டி ஸார்ஸி, ரிக்கல்டான் அரைசதம்
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக டோனி டி ஸார்ஸி 81 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, ரியான் ரிக்கல்டான் 71 ரன்களும், அய்டன் மார்க்ரம் 20 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாஜித் கான் மற்றும் சல்மான் அகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 162 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.