
முன்னாள் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடர் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆஷஸ் தொடர் வருகிற நவ.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் திடலில் தொடங்குகிறது.
ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி முதல் போட்டியும் ஜன.4ஆம் தேதி கடைசி போட்டியும் நடைபெற இருக்கின்றன.
ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆதிக்கம்
இதுவரை நடந்த 73 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் வென்றிருக்கின்றன.
இன்னும் 50க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இரு நாட்டு வீரர்களும் இதுகுறித்து பேசத்தொடங்கியுள்ளனர்.
டேவிட் வார்னரின் கிண்டல்
முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இது பற்றி பேசியதாவது:
கம்மின்ஸ் இல்லையென்றால் 3-1 எனவும் கம்மின்ஸ் இருந்தால் 4-0 எனவும் ஆஸ்திரேலியா வெல்லும். கம்மின்ஸ் இல்லாவிட்டால் முதல் டெஸ்ஸ்டை இங்கிலாந்து வெல்லாம்.
நாங்கள் ஆஷஸ் தொடரை வெல்வதற்காக விளையாடுவோம். அவர்கள் எப்போதும்போல தார்மீக வெற்றிக்காக விளையாடுவார்கள் என்றார்.
இங்கிலாந்து அணி தொடர்களில் தோற்கும்போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்லி ஏமாற்றுவதைக் கிண்டல் செய்யும் வகையில் வார்னர் பேசியிருந்தார்.
வார்னருக்குப் பதிலடி கொடுத்த பிராட்
டேவிட் வார்னரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட் பதிலடி தந்துள்ளார். அவர் பேசியதாவது:
2010க்குப் பிறகு இருப்பதிலேயே மிகவும் பலவீனமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இது வெறுமனே ஒரு கருத்து அல்ல, உண்மை இதுதான்.
கடைசியாக 2010-இல் இங்கிலாந்து வென்றிருந்தது. தற்போது இருக்கும் இங்கிலாந்து அணி 2010-க்குப் பிறகான சிறந்த அணியாக இருக்கிறது என்றார்.
ஆஷஸ் தொடர் குறித்து, இரு நாட்டு வீரர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.