வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!
படம் | ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சோபனா மொஸ்டாரி சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். 66 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

அவரைத் தொடர்ந்து, ரூபியா ஹைதர் 44 ரன்களும், ஷர்மின் அக்தர் 19 ரன்களும் எடுத்தனர். கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்டனர், அன்னாபெல் சதர்லேண்ட், அலானா கிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேகன் ஷுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

சதம் விளாசிய அலிஸா ஹீலி; ஆஸி. அபார வெற்றி!

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 24.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்டு களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் அலிஸா ஹீலி சதம் விளாசியும், லிட்ச்ஃபீல்டு அரைசதம் விளாசியும் அசத்தினர்.

அலிஸா ஹீலி 77 பந்துகளில் 113 ரன்கள் (20 பவுண்டரிகள்) எடுத்தும், லிட்ச்ஃபீல்டு 84 ரன்கள் (12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், முதல் அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Australia won the World Cup match against Bangladesh by 10 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com