

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
சொதப்பிய டாப் ஆர்டர்
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முதல் போட்டியைப் போன்றே இந்த போட்டியிலும் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படத் தவறினர்.
அந்த அணியின் டார் ஆர்டர் பேட்டர்களான ஜேமி ஸ்மித் (13 ரன்கள்), பென் டக்கெட் (ஒரு ரன்), ஜோ ரூட் (25 ரன்கள்), ஜேக்கோப் பெத்தேல் (18 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹாரி ப்ரூக் 34 ரன்களும், சாம் காரண் 17 ரன்களும் எடுத்தனர். பின்வரிசையில் அதிரடியாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும், ஜேக்கோப் டஃபி, ஸகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரை வென்ற நியூசிலாந்து
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 33.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் அரைசதம் கடந்து அசத்தினர். டேரில் மிட்செல் 59 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரச்சின் ரவீந்திரா 58 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 34 ரன்களும், கேன் வில்லியம்சன் 21 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேமி ஓவர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.