

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், கான்பெராவில் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாக இந்திய இளம் வீரர் நிதீஷ்குமார் ரெட்டி, கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. மேலும், அவர் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக நிதீஷ்குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின்போதும் அவர் காயத்தால் அவதிப்பட்டார்.
நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக நிதீஷ்குமார் ரெட்டி, இந்திய அணிக்குத் திரும்ப பிசிசிஐயும் முனைப்பு காட்டி வருகிறது. நிதீஷ்குமார் விலகியதால் இந்திய அணி மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சிவம் துபே, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஹர்ஷித் ராணாவுடன் களமிறங்கியது.
இருப்பினும், போட்டித் தொடங்கி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் முதல் போட்டி கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.