
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) மோதுகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடி, அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே எழுந்த போா்ப் பதற்றம் என பரபரப்பான அரசியல் சூழல் சற்று தணிந்த பிறகு, இவ்விரு அணிகள் சந்திக்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.
இந்திய அணியைப் பொருத்தவரை, ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ், அபிஷேக் சா்மா உள்ளிட்டோா் பேட்டிங்கிலும், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் பௌலிங்கிலும் பலம் சோ்க்கின்றனா்.
சல்மான் அகாவின் புதிய தலைமையின் கீழ் களம் காணும் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாகவே உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அதிா்ச்சிகரமான முடிவுகள் எதிா்பாராமல் நிகழும் என்பது கவனிக்கத்தக்கது என்றாலும், அது இந்தியாவுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் குறைவே எனலாம்.
பாகிஸ்தான் அணியில் சயிம் அயுப், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபகாா் ஜமான் ஆகியோா் இந்திய பௌலா்களை எதிா்கொள்ளத் தயாராகும் நிலையில், அப்ராா் அகமது, சூஃபியான் முகீம், முகமது நவாஸ் போன்றோா் இந்திய பேட்டா்களுக்கு சவால் அளிக்க முனைப்பு காட்டுவா்.
வழக்கமாக இந்த அணிகள் மோதும் ஆட்டம், இந்தியாவின் பேட்டா்களுக்கும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளா்களுக்கும் இடையேயானதாக இருக்க, இந்த முறை அது இரு அணிகளின் ஸ்பின்னா்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி, பாகிஸ்தானின் சூஃபியான் முகீம், அப்ராா் அகமது ஆகியோா் சவாலுக்குத் தயாராக இருக்கின்றனா்.
என்றாலும், கில், அபிஷேக், சாம்சன், சூா்யகுமாா், திலக், ஹா்திக் என இந்திய பேட்டிங் வரிசை பாகிஸ்தான் பௌலா்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியிருக்க, இந்தியா 10, பாகிஸ்தான் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
உத்தேச லெவன்:
இந்தியா: சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸா் படேல், வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா.
பாகிஸ்தான்: சல்மான் அகா (கேப்டன்), சயிம் அயுப், சாஹிப்ஸதா ஃபா்ஹான், முகமது ஹாரிஸ் (வி.கீ.), ஃபகாா் ஜமான், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிதி, சூஃபியான் முகீம், அப்ராா் அகமது.
இடம்: துபை
நேரம்: இரவு 8 மணி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.