
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணி 20 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து அபாரமாக விளையாடி வருகிறது. தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் 10 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். அவர் 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீராங்கனைகள்
மெக் லேனிங் - 45 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2012
ஸ்மிருதி மந்தனா - 50 பந்துகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2025
கேரன் ரால்டான் - 57 பந்துகளில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000
பெத் மூனி - 57 பந்துகளில், இந்தியாவுக்கு எதிராக, 2025
சோஃபி டிவைன் - 59 பந்துகளில், அயர்லாந்துக்கு எதிராக, 2018
சமாரி அத்தப்பத்து- 60 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.