
அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருப்பதாகவும், அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் நம்பிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவதற்காக போராடுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரும் தங்களை போட்டியை வென்று கொடுப்பவர்களாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என நம்புகிறார்கள்.
கடந்த டி20 உலகக் கோப்பை என்னைப் பெரிய அளவில் பாதித்தது. இது போன்ற சூழ்நிலையை மீண்டுமொருமுறை நாம் சந்திக்கக் கூடாது நினைத்துக் கொண்டேன். அந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஃபிட்னஸில் நல்ல முன்னேற்றம் இருந்தது. போட்டிகளில் நன்றாக செயல்பட முடிந்தது.
நாங்கள் அனைவருமே எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடரை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து மகளிர் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திடலில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக அளவிலான ரசிகர்கள் முன்பு விளையாடி பழகியதால், எங்களுக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்காது என்றார்.
முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு இந்திய அணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.