
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இன்று (செப்டம்பர் 25) அறிவித்தார். காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அஜிக் அகர்கர் பேசியதாவது: இந்திய அணியின் துணைக் கேப்டனான ரிஷப் பந்த், அணியின் மிகவும் முக்கியமான வீரர். ஆனால், துரதிருஷ்டவசமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் முழுமையாக குணமடைந்து அணியுடன் இணைவார் என நம்புகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா 516 ரன்களும், 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடமும் பிடித்தார்.
இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 479 ரன்கள் குவித்தார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடமும் பிடித்தார். இந்த தொடரில் அவர் 3 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை விளாசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து வேகமாக ரிஷப் பந்த்தின் கால் விரலில் பட்டதால், அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், விரல் எலும்பு முறிவுடன் பேட் செய்து அணிக்காக அவர் ரன்கள் குவித்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி வருகிற நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.