
அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது. துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷாகின் ஷா அஃப்ரிடி மிகவும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர். அவர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சவாலளிக்கும் விதமாக பந்துவீசுவார். அபிஷேக் சர்மாவும் அவரது அதிரடியான ஆட்டத்தில் மாற்றம் செய்யமாட்டார். இதுவரை ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சை அபிஷேக் சர்மா எதிர்கொண்டபோதெல்லாம், கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆர்வமாக இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்ப்பது போன்ற சூழலே இருந்துள்ளது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிலும் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியை ரசிகர்கள் இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிப்பார்கள். இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மோர்னே மோர்கெல், அபிஷேக் சர்மா மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி இருவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.