
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பங்களுக்கு ஆசியக் கோப்பையில் பெற்ற பரிசுத் தொகையை வழங்க பாகிஸ்தான் அணி முடிவுசெய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்றுமுன்தினம் விளையாடின.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.2.6 கோடியும், இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.3 கோடியும் வழங்கப்பட்டது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை போட்டிக்கான தனது முழு ஊதியத்தையும் நாட்டின் ஆயுதப் படைகளுக்கும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என கருதப்படும் சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7 ஆம் தேதி இரவு இந்திய ஆயுதப்படைகள் வான்வெளி வழியாக பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்பட 140 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் இனி ஒருபோதும் நடைபெறாது என இரு அணி நிர்வாகமும் தெரிவித்திருந்தது. மேலும், இருநாடுகளில் நடைபெறும் ஐசிசி தொடர்களிலும் இந்தியா, பாகிஸ்தானில் நடைபெற்றால் பொதுவான இடங்களில் மட்டுமே விளையாடவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்கவில்லை.
இறுதிப் போட்டியிலும்கூட இரு கேப்டன்களையும் தனித்தனி தொகுப்பாளர்களே பேட்டி எடுத்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.